Wednesday, August 12, 2015

மெஹர்.

விஜய்டிவி சின்னத்திரை மெஹர் படத்தில் வரும் ஒவ்வொரு காட்சியும், பத்துவருசத்துக்கு முன்னதாக எங்கள் ஊரில் அதிகமான வீடுகளில் காணப்பட்ட காட்சிகள், இப்போது சதவீதம் அதிகமாக குறைந்திருப்பினும், வரதட்சனை என்ற பெயரில் வண்டி வண்டியாக சாமான்களை பெண்வீட்டாரிடம் வாங்கும் அவலங்கள் எங்கள் சமுதாயத்தில் இன்னும் இருந்துகொண்டுதான் இருக்கின்றன.

மெஹர் கேரக்டரில் கவிதாயினி சல்மா. தலையில் முக்காடு இல்லாமல் நிறைய தி.மு.க மேடைகளில் பார்த்தவரை, முக்காடே கீழே விழாத மெஹர் கேரக்டரில் பார்க்கும் போது கொஞ்சம் ஜெர்க்காகித்தான் போனேன். இயக்குனர் தாமிராவும் அங்குதான் ஜெர்க்காகிவிட்டார், அவரைச் சொல்லி குற்றமில்லை, தி.மு.கா கட்சிக்காரர்கள் எல்லோரும் நல்ல நடிகர்கள் என்ற எண்ணத்தில் மண்ணள்ளிப் போட்டுவிட்டார் சல்மா. சல்மாவிற்கு பதிலாக வேறு யாராவது தொழில் முறை நடிகை நடித்திருந்தால் படம் டாப்பாகி இருந்திருக்கும்.

இருந்தும், ‘’ஆண்டவன், உன் கையால் தரும் பரக்கத்தை (பணம்) வாங்குவதை, எனக்கு எப்போதும் தரணும்த்தா’’ என பையனிடம் நெகிழும்போது, ‘’உசிரோட இருக்கும் போது ஒரு மவுத்தை (சாவை) எனக்கு காட்டிட்டியேத்தா’’ என அதே பையனிடம் அழும்போதும், ‘’எவ்வளவு கஷ்டம் வந்தாலும் தாங்கிக்குவோம், ஆனால் கேவலப்பட்டு வாழ முடியாது, உசிர மாச்சிக்கிர அதிகாரத்தை அல்லாஹ் எங்களுக்கு தரலையா’’ என போலிஸ் ஸ்டேஷனில் கெஞ்சும் போதும் சல்மாவிடம் இருந்த சாவித்திரி லைட்டா எட்டிப்பார்தாங்க. அதுக்கு அப்புறம், இது சரிப்பட்டு வராதுன்னு சாவித்திரி எங்கயோ மதுவுக்கு எதிரான போராட்டத்துக்கு போயிடுச்சு.

சல்மாவைத் தவிர்த்து மற்றவர்கள் யாரும் ஏமாற்றவில்லை. குறிப்பாக யாஸ்மீனாக வரும் சாண்ரா செஞ்சூரி அடித்திருக்கின்றார். துக்கத்தையும், தவிப்பையும், பாசத்தையும், காதலையும் கண்களின் வழியே காட்டிவிடுகின்றார். விஜய் டிவியில் துறு துறு சாண்ராவிற்காகவே டி.வி பார்த்தகாலம் ஒன்று இருந்தது, ஆறு வருடங்கள் கழித்தாலும் சாண்ரா அப்படியே இருக்கிறார். ரஷீத், ஏட்டு, பஷீர், அப்பாவின் நண்பர்..... என அனைத்து கேரக்டர்களும் மிகைப்படுத்தப்படாத படைப்புகள்.

‘’நான் ஆசாரி, நம்ம ரெண்டு சமூகமும் சின்னய்யா, சித்தியா பழகுனது இப்ப இருக்குறவனுங்களுக்கு என்ன தெரியும், அதுக்கும் சேத்துல்ல குண்டு வெச்சுட்டானுங்க’’ என ஏட்டு வசனம் பேசுவதாக இருக்கட்டும், ‘’அழட்டும் ஏட்டய்யா...., தடுக்காதீங்க...., சில சமயம் அழுகையில தீராத வலிக்கு மருந்து இந்த உலகத்துலயே இல்ல’’ என திருடன் சார் சொல்லுறதாக இருக்கட்டும் வசனம் எல்லாமே சரவெடி.

மாப்பிள்ளை பற்றிய எதிர்பார்ப்பை கேட்கும் தோழியிடம் ‘’ பட்டப்பகல்ல இந்த காலால தெரிவில் நடக்கணும், ஜன்னலுக்கு வெளியே இருக்குற அந்த உலகத்தை பார்க்கனும், மனசு குளிர பாட்டு கேட்கணும், சத்தம் போட்டு பாட்டு பாடணும், அதுக்கு எனக்கு ஒரு கல்யாணம் நடக்கணும், அதற்காக ஒரு மாப்பிள்ளை வேணும் அவ்வளவுதான்’’ என சாண்ரா சொல்லும் போது பெண்ணடிமைத்தனத்தின் வலியை நம்மால் எளிதாக உணரமுடியும்.

‘’காசு இருக்குறவனுக்கு எப்படியாவது ஒரு நம்பிக்கையான அடிமை கிடைக்கிறதுனாலத்தான் பணக்காரன், பணக்காரனாவே இருக்கான்” ‘’ஏழைக்கிட்ட பணம் இல்லாதது விதி இல்லடா அது அரசியல்’’ என எதார்த்தம் பேசும்போது, ‘’என்னண்ணே கம்யூனிசமா?’ என கேட்கும் சக ஊழியனிடம் ‘’ இல்லாதவன் புலம்பல் எல்லாமே கம்யூனிசம்தாண்டா’’ என அந்த வேலையாள் பதில் கூறுவது செம......

கிளைமாக்ஸில் வெளிநாட்டு மாப்பிள்ளை, மாப்பிள்ளை தோழர் கேரக்டரில் ஒருவர் வந்து சுபமாக்கி வைக்கின்றார். சும்மா சொல்லக்கூடாது, கதை, திரைக்கதை, இயக்கம் தாமிராவாக இருந்தாலும், வசனகர்த்தா தாமிரா மிளிர்கிறார்.

தன்னுடய தகுதியிக்கு ஏற்றார் போல் பெண்ணுக்கு பணம்/நகை (மஹர்)  கொடுத்து திருமணம் செய்யவேண்டும் என்ற இஸ்லாத்தின் முறைப்படித்தான் அனைவரும் திருமணம் செய்கின்றார்கள். ஆனால் பெண் வீட்டிலிருந்து சில லட்சம் வாங்கிக்கொண்டு, மஹரின் பெயரில் பத்தாயிரத்தை திரும்ப பெண்ணிற்கு கொடுப்பதுதான்  ஆண்டவனுக்கே அல்வா கொடுக்குறது என்பது.

எங்க ஊரில்....

விதவை திருமணம், வரதட்சனை ஒழிப்பு திருமனம் என்ற பெயரில் திடிரென ஒரு குரூப் கிளம்பி ஜமாத்தில் பெரிய புரட்சி செய்கிறார்கள். வரதட்சனை வாங்கும் கல்யாணங்களுக்கு கூட அவர்கள் செல்வதில்லை. மாலை 5 மணிக்கு  மேல்தான் திருமணம். வருகின்றவர்களுக்கு டீ மட்டும்தான் என எளிமையை கடைபிடிக்கின்றார்கள். இதற்காக அவர்களைப் பாராட்டலாம், ஆனால் எங்க இயக்கத்தினர் மட்டும்தான் முஸ்லீம் என்று சொல்லிக்கிட்டு திரியுறதுதான் குஷ்டமப்பா.....

அந்த குரூப் கொஞ்ச வருசத்துக்கு முன்னாடி, ஊர் ஊராக மீட்டிங் போட்டு, ஏற்கனெவே வரதட்சனை வாங்கியர்களிடம் அந்த பணத்தை திரும்ப பெண்வீட்டில் கொடுக்கச் செய்தார்கள். பரவாயில்லையே அடடா ஆச்சிரியக்குறி என்று போய் பார்த்தால் ஒரே கேள்விக்குறியாகவே தோன்றியது. 20 வருசத்துக்கு முன்பாக கல்யணம் செய்தவர் பெண் வீட்டாரிடம் வாங்கிய 10,000 ரூபாயை திரும்ப கொடுத்தார். 20 வருடம் முன்பாக 10,000 என்பது பெரிய அமவ்ண்ட், அதை அப்படியே இப்ப கொடுத்தா என்ன அர்த்தம்??????. என்னமோ போங்க ஊரில இருக்குற முக்கால்வாசிப் பயல்களும் அந்த அறிவாளி இயக்கத்தில்தான் இருக்கான்.
  

-----------------------------------------------------------------------யாஸிர் அசனப்பா.


5 comments:

  1. ஆண்டவனுக்கே அல்வா கொடுக்கிறவனுங்க எல்லா ஊர்லயும் இப்போ இருக்கிறானுங்க
    லட்சத்தில பணமும் சவரன்சவரனா நகைய வாங்கிட்டு அதுல 10%கூட பெறுமானம் கூட இல்லாத அளவுக்கு மஹர் பணம் கொடுக்கிற வழக்கம் அதிக இருக்கு.
    இந்த படம் பார்க்கல இந்த பதிவ படிச்சதும் நல்லா இருக்கும்னு தோணுது
    ஒரு சில பதிவுல உங்க ஊர் ஜமாத்
    இயக்கங்களையும் இணைச்சு முதல்ல தான் சார்ந்ததை பரிசோதித்து விமர்சித்து பதிவிடுவது பாராட்டத்தக்கது.
    - பிழை பொறுக்கவும்
    நன்றி

    ReplyDelete
  2. வரதட்சணை என்ற கொடிய பழக்கத்தைப் பற்றிய படம் என்று அறிய முடிகிறது.
    நச்சென்று இருக்கிறது விமரிசனம்.

    ReplyDelete
  3. விசுAWESOME பதிவின் மூலம் இங்கு வந்தேன். சுவாரசியமான எழுத்து நடை.
    பதிவுகள் ஒவ்வொன்றும் அழகு. இந்தப் பதிவில் கடைசி இரண்டு
    பாராக்களும் செம பன்ச். தொடரட்டும் தங்களின் எழுத்துப் பணி.

    ReplyDelete