அஜித் குமார் படங்கள் உங்களுக்கு பிடிக்கும் என்றால், இந்த படம் உங்களுக்கு அவ்வளவாக பிடிக்காது.
விஜய் படம் உங்களுக்கு பிடிக்கும் என்றால், தயவு செய்து இந்த படத்திற்கு செல்லவேண்டாம். ஏனென்றால் இது
அவ்வளவு நல்ல படம். நீ அஜித் ரசிகன் உனக்கு மட்டும் எப்படி இந்த படம்
பிடித்திருக்கிறது என்று நீங்கள் நினைக்கக் கூடும். ஆனால், அஜித்தை பிடித்தவர்களுக்கு அஜித்தின் படத்தை
பிடிக்கவேண்டும் என்ற கட்டாயம் இல்லையே.
தேசிய விருது அறிவிக்கப்பட்டதில் இருந்து இந்த படத்தை ‘’குற்றக் கடிதம்’’ என்ற
பெயரிலேயே ஞாபகப்படுத்திக் கொண்டிருந்தேன். படம் முடிந்த நிலையில் படத்துக்கும்,
தலைப்புக்கும் சம்பந்தம் இல்லையே என்று எண்ணி தேடியபோதுதான்,
படத்தின் தலைப்பு ‘’குற்றம் கடிதல்’’ அதாவது ‘’குற்றத்தை கண்டித்தல்’’ என்று உணர்ந்துகொண்டேன்.
‘’அம்மா மாதிரி இருந்து நம்மோட குழந்தைகளை
டீச்சர் பாத்துப்பாங்கன்னு நினைச்சுத்தான் ஒவ்வொருத்தரும் தன்னோட குழந்தைகளை
ஸ்கூலுக்கு அனுப்புறாங்க, ஆனா நான் அந்த பையனை என்னோட
குழந்தையா பார்க்கல’’ என கடைசியில் வரும் அந்த டீச்சரின்
வசனத்தில் இந்த படத்தின் மொத்த கதையும் அடங்கிவிடுகிறது.
‘’பிரைஸ்த லாட்’’ என
கூறிக்கொண்டு ரோட்டில் நோட்டிஸ் கொடுக்கும் ஆச்சாரமான கிரிஸ்தவ தாயின் ஆசிரியை
மகள், இந்து இஞ்சினியரை திருமணம் செய்துகொள்கிறார். மூன்று
நாள் விடுப்பிற்கு பின்பு மீண்டும் பள்ளிக்கு திரும்பும் டீச்சர், சக ஆசிரியை அவர் கணவருடன் சினிமாவிற்கு போவதற்காக, அவருடைய
5 Std கிளாஸை
பார்த்துகொள்கிறார். அங்கு பிறந்தநாள் கொண்டாடும் மாணவியிடம் சாக்லேட்
வாங்கிக்கொண்டு முத்தம் கொடுத்த செழியன் என்ற மாணவனை அந்த பெண்ணிடம் மன்னிப்புக்
கேட்கச் சொல்ல, செழியனோ ‘’உங்களுக்கு பிறந்தநாள் என்றாலும் உங்களுக்கும் கிஸ் கொடுப்பேன்’’ என்று தில்லா சொல்கிறான். அதைக்கேட்டு வகுப்பிலுள்ள அனைவரும் சிரிக்க,
அவமானத்தில் டீச்சர் அவன் கன்னத்தில் அடிக்க, ஏற்கனவே
நோய் இருக்கும் செழியன் மயங்கி விழுகிறான். அதை தொடர்ந்து நடக்கும் நிகழ்வே இந்த
படம்.
கும்பகோண பள்ளி தீ விபத்தில் கைதாகி ஜாமினில் வெளிவந்த ஒரு
ஆசிரியையிடம் ஒரு பத்திரிக்கை கேள்வி கேட்க, அந்த டீச்சர் ‘’ஒவ்வொருத்தரும், இறந்துபோன அவங்க ஒரு குழந்தைக்காக அழுறாங்க, ஆனா
நான், செத்துப்போன என்னோட 94 குழந்தைக்காகவும் அழறேன்’’
என்று சொன்னது எனக்கு இன்னும் நல்லா ஞாபகம் இருக்கு. குழந்தைகளை
கண்டிப்பது தவறு இல்லை ஆனால் காட்டுமிராண்டித்தனமாக தண்டிப்பது மிகவும் தவறு.
செக்ஸ் கல்வியின் அவசியம் பற்றி ஒரு சக ஆண் ஆசிரியரிடம்
விவாதிப்பது, பெண்குறியின் படத்தை போர்டில்
வரைந்து அதைப் பற்றி பாடம் நடத்திவிட்டு ‘’இப்படித்தான் நம்ம
மாதிரி அழகழகான குழந்தைகள் இந்த உலகத்துக்கு வாராங்க’’ என
முடிக்கும் அந்த டீச்சர்தான் என்னோட பேவரேட். ஹாஸ்பிடலில் இருக்கும்
மாணவனுக்காகவும், சக ஆசிரியைக்காகவும் ஒரே நேரத்தில்
பரிதவிப்பதில் பிரமாதப்படுத்துகிறார்.
‘’மொழி’’ படத்திற்கு
பின்பு இந்த படத்தில்தான், ஒருவரைக் கூட கெட்டவர்களாக
காட்டாதது. எல்லோரும் நல்லவர்கள், சூழ்நிலை அந்த நல்லவர்களை
எப்படி நடத்துகிறது என்பதை எதார்த்ததோடு சொன்னதில் இயக்குனர் பாராட்டுக்குறியவர்.
படத்தில் எல்லோரும் புதுமுகங்களாகவே தெரிந்தார்கள், ஆனால்
நடிப்பில் அவ்வளவு நேர்த்தி. பிரின்ஸ்பாலாக வருபவர், டாக்டராக
வருபவர், லாரி டிரைவராக வருபவர், பெண்
போலிஸாக வருபவர் என அத்தனை பேரின் நடிப்பும் அவ்வளவு இயல்பாக இருந்தது.
தன்மீதான கோபம் குறையாத அம்மாவைப் பற்றி நினைத்து வருந்தும்
போது ‘’என்ன ஏன்டா கல்யாணம்
பண்ணினோம்னு தோனுதா?’’ என்று கேட்கும் கணவனிடம் ‘’இல்ல, நீ கிரிஸ்டியனாக இருந்திருக்காலாம்னு தோனுது’’
என்று கவலைப் புன்னகையோடு சொல்லும்போது, அவர்களின்
காதல் பிளாஷ்பேக் எல்லாம் தேவையில்லாமல் போகிறது. ஆசையுடன் கணவனிடம் குங்குமத்தை
வைக்கச் சொல்லி பின்பு சர்சில் வைத்து இதனால்தான் துன்பம் வந்ததாக நினைத்து
குங்குமத்தை மாறி மாறி அழிக்கும் காட்சி, கஷ்டகாலங்களில்
மனிதனின் மனநிலை எவ்வாறு மாறுகிறது என்பதைக் காட்டும். தாலியை ஜாக்கெட்குள்
மறைக்கும் போது கிரிஸ்துவ பாடலும், வெளிய எடுத்து போடும்
போது ஹிந்து பக்தி பாடலும் பேக்ரவுண்டில் வருவது சூப்பர். படத்தில் வரும் இளையராஜா
பாடல்கள் காட்சிக்குத் தக்கவாரு தேர்ந்தெடுத்திருப்பது அடுத்த சூப்பர்.
கம்யூனிஸ்டாக வரும் செழியனின் மாமா கேரக்டரில் நடித்தவர்
பாராட்டுக்குறியவர். ஹாஸ்பிடலில் தங்கை மகனுக்காக தவிப்பது, தங்கைக்கு ஆறுதல் கூறுவது, பிரின்ஸ்பாலிடம் ‘’அடிச்ச டீச்சர் இன்னும் அரைமணி
நேரத்துக்குள்ள இங்க வரணும்’’ என கோபப்படும் போதும் நம்
கவனத்தை ஈர்கிறார். குறிப்பாக டீச்சரை தேடி அவர் அம்மா வீட்டிற்கு செல்லும் போது,
அவர்களின் பிரேயர் முடியும்வரை காத்திருப்பதின் மூலம் இதுதான்
கம்யூனிசம் என்பதை உணர்த்தியிருப்பார். அடுத்ததாக பிரிஸ்பால் வீட்டில் ‘’உங்க குழந்தைக்கு இது நடந்திருந்தா, இப்படித்தான்
டீச்சரை ஒழிச்சிவச்சிப்பீங்களா?’’ என கோபப்படும்போது ‘’எங்களுக்கும் ஒரு பொண்ணு இருந்தாப்பா, ஒரு
ஆக்ஸிடெண்ட்ல இறந்திட்டா, உங்களுக்கு இருக்குற புள்ளயோட
அருமைதான் தெரியும், எங்களுக்கு இல்லாம போனதோட வலி தெரியும்’’
என பிரின்ஸ்பால் மனைவி கூறியதை கேட்டு சங்கடத்தோடு செல்லும்
காட்சிகள் என எல்லா இடங்களிலும் இம்மி பிசையாமல் நடித்திருப்பார்.
‘’சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா செல்வக்
களஞ்சியமே.....’’ பாரதி பாடலுக்கு இசையும் சரி, அந்த பாடலிலேயே செழியனின் குடும்பம், மெர்லின்-மணிகண்டன்
காதலை காட்சிப்படுத்திய விதமும் நன்று.
சமுகத்தின் சிலரை பலகோணங்களில் காட்சிப்படுத்துகிறது இந்த
குற்றம் கடிதல்.
-----------------------------------------------------------------------------------யாஸிர்
அசனப்பா.
No comments:
Post a Comment