Tuesday, September 29, 2015

குற்றம் கடிதல்.

அஜித் குமார் படங்கள் உங்களுக்கு பிடிக்கும் என்றால், இந்த படம் உங்களுக்கு அவ்வளவாக பிடிக்காது. விஜய் படம் உங்களுக்கு பிடிக்கும் என்றால், தயவு செய்து இந்த படத்திற்கு செல்லவேண்டாம். ஏனென்றால் இது அவ்வளவு நல்ல படம். நீ அஜித் ரசிகன் உனக்கு மட்டும் எப்படி இந்த படம் பிடித்திருக்கிறது என்று நீங்கள் நினைக்கக் கூடும். ஆனால், அஜித்தை பிடித்தவர்களுக்கு அஜித்தின் படத்தை பிடிக்கவேண்டும் என்ற கட்டாயம் இல்லையே.

தேசிய விருது அறிவிக்கப்பட்டதில் இருந்து இந்த படத்தை ‘’குற்றக் கடிதம்’’ என்ற பெயரிலேயே ஞாபகப்படுத்திக் கொண்டிருந்தேன். படம் முடிந்த நிலையில் படத்துக்கும், தலைப்புக்கும் சம்பந்தம் இல்லையே என்று எண்ணி தேடியபோதுதான், படத்தின் தலைப்பு ‘’குற்றம் கடிதல்’’ அதாவது ‘’குற்றத்தை கண்டித்தல்’’ என்று உணர்ந்துகொண்டேன்.

‘’அம்மா மாதிரி இருந்து நம்மோட குழந்தைகளை டீச்சர் பாத்துப்பாங்கன்னு நினைச்சுத்தான் ஒவ்வொருத்தரும் தன்னோட குழந்தைகளை ஸ்கூலுக்கு அனுப்புறாங்க, ஆனா நான் அந்த பையனை என்னோட குழந்தையா பார்க்கல’’ என கடைசியில் வரும் அந்த டீச்சரின் வசனத்தில் இந்த படத்தின் மொத்த கதையும் அடங்கிவிடுகிறது.

‘’பிரைஸ்த லாட்’’ என கூறிக்கொண்டு ரோட்டில் நோட்டிஸ் கொடுக்கும் ஆச்சாரமான கிரிஸ்தவ தாயின் ஆசிரியை மகள், இந்து இஞ்சினியரை திருமணம் செய்துகொள்கிறார். மூன்று நாள் விடுப்பிற்கு பின்பு மீண்டும் பள்ளிக்கு திரும்பும் டீச்சர், சக ஆசிரியை அவர் கணவருடன் சினிமாவிற்கு போவதற்காக, அவருடைய 5 Std கிளாஸை பார்த்துகொள்கிறார். அங்கு பிறந்தநாள் கொண்டாடும் மாணவியிடம் சாக்லேட் வாங்கிக்கொண்டு முத்தம் கொடுத்த செழியன் என்ற மாணவனை அந்த பெண்ணிடம் மன்னிப்புக் கேட்கச் சொல்ல, செழியனோ ‘’உங்களுக்கு பிறந்தநாள் என்றாலும் உங்களுக்கும் கிஸ் கொடுப்பேன்’’ என்று தில்லா சொல்கிறான். அதைக்கேட்டு வகுப்பிலுள்ள அனைவரும் சிரிக்க, அவமானத்தில் டீச்சர் அவன் கன்னத்தில் அடிக்க, ஏற்கனவே நோய் இருக்கும் செழியன் மயங்கி விழுகிறான். அதை தொடர்ந்து நடக்கும் நிகழ்வே இந்த படம்.

கும்பகோண பள்ளி தீ விபத்தில் கைதாகி ஜாமினில் வெளிவந்த ஒரு ஆசிரியையிடம் ஒரு பத்திரிக்கை கேள்வி கேட்க, அந்த டீச்சர் ‘’ஒவ்வொருத்தரும், இறந்துபோன அவங்க ஒரு குழந்தைக்காக அழுறாங்க, ஆனா நான், செத்துப்போன என்னோட 94 குழந்தைக்காகவும் அழறேன்’’ என்று சொன்னது எனக்கு இன்னும் நல்லா ஞாபகம் இருக்கு. குழந்தைகளை கண்டிப்பது தவறு இல்லை ஆனால் காட்டுமிராண்டித்தனமாக தண்டிப்பது மிகவும் தவறு.

செக்ஸ் கல்வியின் அவசியம் பற்றி ஒரு சக ஆண் ஆசிரியரிடம் விவாதிப்பது, பெண்குறியின் படத்தை போர்டில் வரைந்து அதைப் பற்றி பாடம் நடத்திவிட்டு ‘’இப்படித்தான் நம்ம மாதிரி அழகழகான குழந்தைகள் இந்த உலகத்துக்கு வாராங்க’’ என முடிக்கும் அந்த டீச்சர்தான் என்னோட பேவரேட். ஹாஸ்பிடலில் இருக்கும் மாணவனுக்காகவும், சக ஆசிரியைக்காகவும் ஒரே நேரத்தில் பரிதவிப்பதில் பிரமாதப்படுத்துகிறார்.

‘’மொழி’’ படத்திற்கு பின்பு இந்த படத்தில்தான், ஒருவரைக் கூட கெட்டவர்களாக காட்டாதது. எல்லோரும் நல்லவர்கள், சூழ்நிலை அந்த நல்லவர்களை எப்படி நடத்துகிறது என்பதை எதார்த்ததோடு சொன்னதில் இயக்குனர் பாராட்டுக்குறியவர். படத்தில் எல்லோரும் புதுமுகங்களாகவே தெரிந்தார்கள், ஆனால் நடிப்பில் அவ்வளவு நேர்த்தி. பிரின்ஸ்பாலாக வருபவர், டாக்டராக வருபவர், லாரி டிரைவராக வருபவர், பெண் போலிஸாக வருபவர் என அத்தனை பேரின் நடிப்பும் அவ்வளவு இயல்பாக இருந்தது.

தன்மீதான கோபம் குறையாத அம்மாவைப் பற்றி நினைத்து வருந்தும் போது ‘’என்ன ஏன்டா கல்யாணம் பண்ணினோம்னு தோனுதா?’’ என்று கேட்கும் கணவனிடம் ‘’இல்ல, நீ கிரிஸ்டியனாக இருந்திருக்காலாம்னு தோனுது’’ என்று கவலைப் புன்னகையோடு சொல்லும்போது, அவர்களின் காதல் பிளாஷ்பேக் எல்லாம் தேவையில்லாமல் போகிறது. ஆசையுடன் கணவனிடம் குங்குமத்தை வைக்கச் சொல்லி பின்பு சர்சில் வைத்து இதனால்தான் துன்பம் வந்ததாக நினைத்து குங்குமத்தை மாறி மாறி அழிக்கும் காட்சி, கஷ்டகாலங்களில் மனிதனின் மனநிலை எவ்வாறு மாறுகிறது என்பதைக் காட்டும். தாலியை ஜாக்கெட்குள் மறைக்கும் போது கிரிஸ்துவ பாடலும், வெளிய எடுத்து போடும் போது ஹிந்து பக்தி பாடலும் பேக்ரவுண்டில் வருவது சூப்பர். படத்தில் வரும் இளையராஜா பாடல்கள் காட்சிக்குத் தக்கவாரு தேர்ந்தெடுத்திருப்பது அடுத்த சூப்பர்.

கம்யூனிஸ்டாக வரும் செழியனின் மாமா கேரக்டரில் நடித்தவர் பாராட்டுக்குறியவர். ஹாஸ்பிடலில் தங்கை மகனுக்காக தவிப்பது, தங்கைக்கு ஆறுதல் கூறுவது, பிரின்ஸ்பாலிடம் ‘’அடிச்ச டீச்சர் இன்னும் அரைமணி நேரத்துக்குள்ள இங்க வரணும்’’ என கோபப்படும் போதும் நம் கவனத்தை ஈர்கிறார். குறிப்பாக டீச்சரை தேடி அவர் அம்மா வீட்டிற்கு செல்லும் போது, அவர்களின் பிரேயர் முடியும்வரை காத்திருப்பதின் மூலம் இதுதான் கம்யூனிசம் என்பதை உணர்த்தியிருப்பார். அடுத்ததாக பிரிஸ்பால் வீட்டில் ‘’உங்க குழந்தைக்கு இது நடந்திருந்தா, இப்படித்தான் டீச்சரை ஒழிச்சிவச்சிப்பீங்களா?’’ என கோபப்படும்போது ‘’எங்களுக்கும் ஒரு பொண்ணு இருந்தாப்பா, ஒரு ஆக்ஸிடெண்ட்ல இறந்திட்டா, உங்களுக்கு இருக்குற புள்ளயோட அருமைதான் தெரியும், எங்களுக்கு இல்லாம போனதோட வலி தெரியும்’’ என பிரின்ஸ்பால் மனைவி கூறியதை கேட்டு சங்கடத்தோடு செல்லும் காட்சிகள் என எல்லா இடங்களிலும் இம்மி பிசையாமல் நடித்திருப்பார்.

‘’சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா செல்வக் களஞ்சியமே.....’’ பாரதி பாடலுக்கு இசையும் சரி, அந்த பாடலிலேயே செழியனின் குடும்பம், மெர்லின்-மணிகண்டன் காதலை காட்சிப்படுத்திய விதமும் நன்று.

சமுகத்தின் சிலரை பலகோணங்களில் காட்சிப்படுத்துகிறது இந்த குற்றம் கடிதல்.

 -----------------------------------------------------------------------------------யாஸிர் அசனப்பா.

Wednesday, August 12, 2015

மெஹர்.

விஜய்டிவி சின்னத்திரை மெஹர் படத்தில் வரும் ஒவ்வொரு காட்சியும், பத்துவருசத்துக்கு முன்னதாக எங்கள் ஊரில் அதிகமான வீடுகளில் காணப்பட்ட காட்சிகள், இப்போது சதவீதம் அதிகமாக குறைந்திருப்பினும், வரதட்சனை என்ற பெயரில் வண்டி வண்டியாக சாமான்களை பெண்வீட்டாரிடம் வாங்கும் அவலங்கள் எங்கள் சமுதாயத்தில் இன்னும் இருந்துகொண்டுதான் இருக்கின்றன.

மெஹர் கேரக்டரில் கவிதாயினி சல்மா. தலையில் முக்காடு இல்லாமல் நிறைய தி.மு.க மேடைகளில் பார்த்தவரை, முக்காடே கீழே விழாத மெஹர் கேரக்டரில் பார்க்கும் போது கொஞ்சம் ஜெர்க்காகித்தான் போனேன். இயக்குனர் தாமிராவும் அங்குதான் ஜெர்க்காகிவிட்டார், அவரைச் சொல்லி குற்றமில்லை, தி.மு.கா கட்சிக்காரர்கள் எல்லோரும் நல்ல நடிகர்கள் என்ற எண்ணத்தில் மண்ணள்ளிப் போட்டுவிட்டார் சல்மா. சல்மாவிற்கு பதிலாக வேறு யாராவது தொழில் முறை நடிகை நடித்திருந்தால் படம் டாப்பாகி இருந்திருக்கும்.

இருந்தும், ‘’ஆண்டவன், உன் கையால் தரும் பரக்கத்தை (பணம்) வாங்குவதை, எனக்கு எப்போதும் தரணும்த்தா’’ என பையனிடம் நெகிழும்போது, ‘’உசிரோட இருக்கும் போது ஒரு மவுத்தை (சாவை) எனக்கு காட்டிட்டியேத்தா’’ என அதே பையனிடம் அழும்போதும், ‘’எவ்வளவு கஷ்டம் வந்தாலும் தாங்கிக்குவோம், ஆனால் கேவலப்பட்டு வாழ முடியாது, உசிர மாச்சிக்கிர அதிகாரத்தை அல்லாஹ் எங்களுக்கு தரலையா’’ என போலிஸ் ஸ்டேஷனில் கெஞ்சும் போதும் சல்மாவிடம் இருந்த சாவித்திரி லைட்டா எட்டிப்பார்தாங்க. அதுக்கு அப்புறம், இது சரிப்பட்டு வராதுன்னு சாவித்திரி எங்கயோ மதுவுக்கு எதிரான போராட்டத்துக்கு போயிடுச்சு.

சல்மாவைத் தவிர்த்து மற்றவர்கள் யாரும் ஏமாற்றவில்லை. குறிப்பாக யாஸ்மீனாக வரும் சாண்ரா செஞ்சூரி அடித்திருக்கின்றார். துக்கத்தையும், தவிப்பையும், பாசத்தையும், காதலையும் கண்களின் வழியே காட்டிவிடுகின்றார். விஜய் டிவியில் துறு துறு சாண்ராவிற்காகவே டி.வி பார்த்தகாலம் ஒன்று இருந்தது, ஆறு வருடங்கள் கழித்தாலும் சாண்ரா அப்படியே இருக்கிறார். ரஷீத், ஏட்டு, பஷீர், அப்பாவின் நண்பர்..... என அனைத்து கேரக்டர்களும் மிகைப்படுத்தப்படாத படைப்புகள்.

‘’நான் ஆசாரி, நம்ம ரெண்டு சமூகமும் சின்னய்யா, சித்தியா பழகுனது இப்ப இருக்குறவனுங்களுக்கு என்ன தெரியும், அதுக்கும் சேத்துல்ல குண்டு வெச்சுட்டானுங்க’’ என ஏட்டு வசனம் பேசுவதாக இருக்கட்டும், ‘’அழட்டும் ஏட்டய்யா...., தடுக்காதீங்க...., சில சமயம் அழுகையில தீராத வலிக்கு மருந்து இந்த உலகத்துலயே இல்ல’’ என திருடன் சார் சொல்லுறதாக இருக்கட்டும் வசனம் எல்லாமே சரவெடி.

மாப்பிள்ளை பற்றிய எதிர்பார்ப்பை கேட்கும் தோழியிடம் ‘’ பட்டப்பகல்ல இந்த காலால தெரிவில் நடக்கணும், ஜன்னலுக்கு வெளியே இருக்குற அந்த உலகத்தை பார்க்கனும், மனசு குளிர பாட்டு கேட்கணும், சத்தம் போட்டு பாட்டு பாடணும், அதுக்கு எனக்கு ஒரு கல்யாணம் நடக்கணும், அதற்காக ஒரு மாப்பிள்ளை வேணும் அவ்வளவுதான்’’ என சாண்ரா சொல்லும் போது பெண்ணடிமைத்தனத்தின் வலியை நம்மால் எளிதாக உணரமுடியும்.

‘’காசு இருக்குறவனுக்கு எப்படியாவது ஒரு நம்பிக்கையான அடிமை கிடைக்கிறதுனாலத்தான் பணக்காரன், பணக்காரனாவே இருக்கான்” ‘’ஏழைக்கிட்ட பணம் இல்லாதது விதி இல்லடா அது அரசியல்’’ என எதார்த்தம் பேசும்போது, ‘’என்னண்ணே கம்யூனிசமா?’ என கேட்கும் சக ஊழியனிடம் ‘’ இல்லாதவன் புலம்பல் எல்லாமே கம்யூனிசம்தாண்டா’’ என அந்த வேலையாள் பதில் கூறுவது செம......

கிளைமாக்ஸில் வெளிநாட்டு மாப்பிள்ளை, மாப்பிள்ளை தோழர் கேரக்டரில் ஒருவர் வந்து சுபமாக்கி வைக்கின்றார். சும்மா சொல்லக்கூடாது, கதை, திரைக்கதை, இயக்கம் தாமிராவாக இருந்தாலும், வசனகர்த்தா தாமிரா மிளிர்கிறார்.

தன்னுடய தகுதியிக்கு ஏற்றார் போல் பெண்ணுக்கு பணம்/நகை (மஹர்)  கொடுத்து திருமணம் செய்யவேண்டும் என்ற இஸ்லாத்தின் முறைப்படித்தான் அனைவரும் திருமணம் செய்கின்றார்கள். ஆனால் பெண் வீட்டிலிருந்து சில லட்சம் வாங்கிக்கொண்டு, மஹரின் பெயரில் பத்தாயிரத்தை திரும்ப பெண்ணிற்கு கொடுப்பதுதான்  ஆண்டவனுக்கே அல்வா கொடுக்குறது என்பது.

எங்க ஊரில்....

விதவை திருமணம், வரதட்சனை ஒழிப்பு திருமனம் என்ற பெயரில் திடிரென ஒரு குரூப் கிளம்பி ஜமாத்தில் பெரிய புரட்சி செய்கிறார்கள். வரதட்சனை வாங்கும் கல்யாணங்களுக்கு கூட அவர்கள் செல்வதில்லை. மாலை 5 மணிக்கு  மேல்தான் திருமணம். வருகின்றவர்களுக்கு டீ மட்டும்தான் என எளிமையை கடைபிடிக்கின்றார்கள். இதற்காக அவர்களைப் பாராட்டலாம், ஆனால் எங்க இயக்கத்தினர் மட்டும்தான் முஸ்லீம் என்று சொல்லிக்கிட்டு திரியுறதுதான் குஷ்டமப்பா.....

அந்த குரூப் கொஞ்ச வருசத்துக்கு முன்னாடி, ஊர் ஊராக மீட்டிங் போட்டு, ஏற்கனெவே வரதட்சனை வாங்கியர்களிடம் அந்த பணத்தை திரும்ப பெண்வீட்டில் கொடுக்கச் செய்தார்கள். பரவாயில்லையே அடடா ஆச்சிரியக்குறி என்று போய் பார்த்தால் ஒரே கேள்விக்குறியாகவே தோன்றியது. 20 வருசத்துக்கு முன்பாக கல்யணம் செய்தவர் பெண் வீட்டாரிடம் வாங்கிய 10,000 ரூபாயை திரும்ப கொடுத்தார். 20 வருடம் முன்பாக 10,000 என்பது பெரிய அமவ்ண்ட், அதை அப்படியே இப்ப கொடுத்தா என்ன அர்த்தம்??????. என்னமோ போங்க ஊரில இருக்குற முக்கால்வாசிப் பயல்களும் அந்த அறிவாளி இயக்கத்தில்தான் இருக்கான்.
  

-----------------------------------------------------------------------யாஸிர் அசனப்பா.


Monday, May 18, 2015

பொ(பு)றம்போக்கு

‘’யாரை எதிர்த்து?, எதற்காக ரத்தம் சிந்தி போராடுகிறோம்? என்று தெரியாமல் குழம்பிப்போன இந்த காலகட்டத்தில், எல்லா பிரட்சனைக்குப் பின்னாலும் மறைந்திருக்குற ஒரே எதிரி தனியுடைமை. மக்களின் விடுதலைக்கான ஒரே வழி பொதுவுடைமைதான். அதை என் உயிரைக்கொடுத்து இந்த உலகத்துக்கு உணர்த்த விரும்புகிறேன் - இன்குலாப் ஜிந்தாபாத்’’என்று ஆர்யா தூக்கு கயிறுக்கு முன்னாடி நின்று பேசும் வசனம் ஏனோ, இட்லி-சட்னி காம்பினேசனில் கம்யூனிசத்தை எடுத்துச் சொல்லும் கோக் பிராண்ட் அம்பாஸிடர் அளவுக்கு பலருக்குப் புரியவில்லை. 

படம் பார்க்கப் போன பத்து பேரில் என்னைத்தவிர்த்து யாருக்கும் இந்த படம் பிடிக்கவில்லை. எனக்குப் பிடித்தற்கான காரணம் கேட்டபோது, பதில் சொல்ல தெரியவில்லை. ஏதாவது ஒரு காரணத்தை சொல்லி தப்பிக்க நினைத்தால், 9:1 ரேசியோ கொஞ்சம் பயமுறுத்தியது. இறுதியாக, முதல் பாடலில் வரும் ‘’ஆயா’’வை வைத்து அனைவரையும் ஆசுவாசப்படுத்தினேன்.

ஆர்யா-ஷாம்-சேதுபதி, மூவரின் நடிப்பு அற்புதம் என்றாலும் சேதுபதிதான் மேன் ஆப் தி பிலிம். தோனி இருக்குற டீமில் ஒரு ஜடேஜா இருக்கவேண்டும் என்பது விதி போல இந்த படத்தில் கார்த்திக்கா நாயர். பெண் போராளியை பாரின் ரிட்டன் ரேஞ்சுக்குக் காட்டியது கொடுமை. அன்பே சிவம் படத்தில் உமா ரியாஸ் கெட்டப்பை கொஞ்சம் கவனித்திருந்திருக்கலாம். படத்தில் மூன்று ஹீரோக்கள் என்றாலும் ஒரே ஒரு வில்லன் என்றால் அது பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளராகத்தான் இருக்கும். பேசாமல் பேக்ரவுண்ட் ஸ்கோர் செய்த இளைய தென்றல் தேவாவின் புதல்வரிம் கொடுத்திருந்தால், தேவலாம் என்றிருந்தது. ‘’இந்த ரணகளத்துலயும் ஒரு கிளுகிளுப்பு கேக்குது’’ என்பது போல குண்டு வைக்கப் போற இடத்துல எதுக்கு குஜாலா ஒரு பாட்டு?.இன்னும் எத்தனை நாளுக்குத்தான் ராமநாராயணின் கிராபிக்ஸையே நம்பிக்கொண்டு இருப்போம்னு தெரியவில்லை, பலூர் கிராபிக்ஸ் அத்தனை அபத்தம்.

லெனின் சொன்னது போல ‘’கம்யூனிஸ்ட் என்பவன் இந்த உலகில் எப்போதும் மைனாரிட்டிதான்’’ என்பதை படத்தின் கடைசிக் காட்சியில் ‘’தனக்காக வாழ்கிற வாழ்க்கைங்குறது காத்துல அடிச்சிக்கிட்டு போகுற காகிதம் மாதிரி, தன்னை நம்பிக்கொண்டிருக்குற மக்களுக்காக வாழ்கிற வாழ்க்கைங்குறது மலை மாதிரின்னு நீங்க சொல்லுவீங்கல்ல அதோட ரீச் இன்னைக்கு என்னன்னு தெரியுமா?” என்று கேட்டுவிட்டு ‘’நான் எப்போதும் உண்மைதான் பேசுவேன்னு தெரியுல்ல சார்’’ என்று வி.சேதுபதி சொல்லும்போது, அதோட ரீச் ‘’அவ்வளவாக சொல்லிக்கொள்வது போல் இல்லை’’ என்பதை நச்சுன்னு உணர்த்தும்.

‘’பொம்மைக்குப் பதிலா நான் தொங்குறேன்’’ என ஆர்யா கேட்கும்போது, லிவரை ஷாம் இழுக்க விஜய் சேதுபதி கேட்கும்போதும் மூவரின் நடிப்பு சும்மா அள்ளும். ‘’16 வயசு பொண்ணை கற்பழித்து பொணத்தை நானே எரிச்சேன், இத பல இடங்களில் சொல்லிட்டேன், வேணும்னா இங்க இப்ப  நடிச்சுக்காட்டவா?’’ என கூறும் 12 வருட கைதியை, நிரபராதி என்பதை நிரூபித்து விடுதலை செய்யும் போது, அவன் கேட்கும் கேள்வி அனைத்துக்கும் இந்நாட்டில் யார் பதில் சொல்லுவது?. வசனத்திற்காக இந்த வருடத்தின் விஜய் அவார்ட்ஸ் விருதில் கண்டிப்பாக இந்த படம் நாமிநேட் லிஸ்டில் கூட இருக்காது, ஏனென்றால், வசனங்கள் அனைத்தும் அவ்வளவு ஷார்ப். குறிப்பாக தூக்குக்கு முன்னாடி ஷாம், ஆர்யா உரையாடல்.
‘’கருணை மனு கொடு நீ உயிர்வாழ நான் ஏற்பாடு பண்ணுகிறேன்’’ என ஷாம் கேட்கும்போது, ‘’உங்ககிட்ட கருணை கேட்டு நான் வாழனும்னு எனக்கு அவசியம் இல்லை, சாவ பார்த்து பயம் இருக்கு, வாழனும்னு ஆசை இருக்கு, அதை ஏன் நான் உங்ககிட்ட கேட்டு வாழனும்னு நீங்க ஆசைப்ப்டுறீங்க?’’ என ஆர்யா பதில் சொல்லும்போது அக்மார்க் போராளியாகுறார்.

‘’இது மக்கள் தேர்ந்தெடுக்கும் அரசு? மக்கள் எப்படி அவங்களுக்கு எதிரான ஒரு அரசை தேர்ந்தெடுப்பார்கள்?’’ என ஷாம் கேட்பதற்கு
‘’வாய்ப்பிருக்கு, அது நடந்துக்கிட்டும் இருக்கு’’ என கூலாக ஆர்யா சொல்லுவது நிகழ்கால உண்மை.

ரசித்த வசனங்கள்

1.     ஷாம் = ஜனங்களுக்காக போராடுறோம்னு சொல்லுறீங்க, ஆனா அந்த ஜனங்களே உன்னை தூக்குல போட சொல்லுறாங்க?
ஆர்யா = நீங்க பாக்குறவங்க மட்டுமே ஜனங்க கிடையாது.

2.    ஷாம் = இன்னும் கொஞ்ச நாள்ல சாகப்போற, அதுக்குள்ள என்ன எழுதப்போற?
ஆர்யா =  யார்தான் சாகமாட்டாங்க? நீங்க சாகமாட்டீங்களா? சாவுக்கு முன்னாடி என்ன பண்ணப்போகிறோம் என்பதுதான் முக்கியம்.

3.    கண்டுபிடிப்பு எல்லாமே மக்களோட நன்மைக்கு கிடையாது, காசுக்காக நிறைய கண்டுபிடிப்புகள் இங்க நடந்துக்கிட்டுத்தான் இருக்கு.

4.    வாழ்க்கை முரண்பாடுகளை கண்க்கிலெடுக்காத எந்த ஒரு தேசிய விடுதலை போராட்டமும் முழுமையா சாத்தியம் இல்லை.

5.    வி.சேதுபதி = இன்னைக்கு தூக்குப்போட்ட நாள், அதுதான் ஆஸ்பித்ரியில செத்த அனாத பொணத்தை என் செலவுல காரியம் பண்ணுறேன். என்ன பண்ணாலும் மனசு ஆறல.
கார்த்திகா = பசியில சாவுறங்கள காப்பாத்து உன் மனசு ஆறும்.

6.    அரசாங்கத்துக்கு வேலை செய்யுற எல்லா உளவாளிகளுக்கும் (நாதியத்து போய் கிடக்குறது) இதுதான் நடக்கும்.

7.    உலக தொழிலாளர்களே ஒன்றுகூடுங்கள்ன்னு சொன்னோம், ஆனா இன்னைக்கு உலக முதலாளிகள் எல்லாம் ஒன்னாகூடி நிக்குறாங்க.

8.    போராளி = மக்களுக்காக நாம எல்லா லெவல்லையும் இறங்கி போராடுறோம், ஆனா மக்கள் நம்மளை, தீவிரவாதின்னுதானே சொல்லுறாங்க?

கார்த்திகா = மீடியாகூட சூப்பர் கேப்பிட்டல் ஆகிடுச்சு, அவங்க காட்டுறதுமாதிரித்தானே மக்களும் நம்புவாங்க.

9.    ஆர்யா = இருக்குறதுலேயே பெரிய கிரைம், திட்டம்போட்டு ஒருத்தன கொல்லுறதுதான், அத பண்ணப்போற உங்களுக்கு (ஷாம்) என்ன தண்டனை? இல்ல இவனுக்கு (வி.சேதுபதி) என்ன தண்டனை?
வி.சேதுபதி = சார், உங்கள தூக்குல போடுறதே எனக்கு பெரிய தண்டனைதான் சார்.

லால்ஸலாம் எஸ்.பி.ஜனநாதன்



---------------------------------------------------------------------------------------யாஸிர் அசனப்பா.