Monday, May 18, 2015

பொ(பு)றம்போக்கு

‘’யாரை எதிர்த்து?, எதற்காக ரத்தம் சிந்தி போராடுகிறோம்? என்று தெரியாமல் குழம்பிப்போன இந்த காலகட்டத்தில், எல்லா பிரட்சனைக்குப் பின்னாலும் மறைந்திருக்குற ஒரே எதிரி தனியுடைமை. மக்களின் விடுதலைக்கான ஒரே வழி பொதுவுடைமைதான். அதை என் உயிரைக்கொடுத்து இந்த உலகத்துக்கு உணர்த்த விரும்புகிறேன் - இன்குலாப் ஜிந்தாபாத்’’என்று ஆர்யா தூக்கு கயிறுக்கு முன்னாடி நின்று பேசும் வசனம் ஏனோ, இட்லி-சட்னி காம்பினேசனில் கம்யூனிசத்தை எடுத்துச் சொல்லும் கோக் பிராண்ட் அம்பாஸிடர் அளவுக்கு பலருக்குப் புரியவில்லை. 

படம் பார்க்கப் போன பத்து பேரில் என்னைத்தவிர்த்து யாருக்கும் இந்த படம் பிடிக்கவில்லை. எனக்குப் பிடித்தற்கான காரணம் கேட்டபோது, பதில் சொல்ல தெரியவில்லை. ஏதாவது ஒரு காரணத்தை சொல்லி தப்பிக்க நினைத்தால், 9:1 ரேசியோ கொஞ்சம் பயமுறுத்தியது. இறுதியாக, முதல் பாடலில் வரும் ‘’ஆயா’’வை வைத்து அனைவரையும் ஆசுவாசப்படுத்தினேன்.

ஆர்யா-ஷாம்-சேதுபதி, மூவரின் நடிப்பு அற்புதம் என்றாலும் சேதுபதிதான் மேன் ஆப் தி பிலிம். தோனி இருக்குற டீமில் ஒரு ஜடேஜா இருக்கவேண்டும் என்பது விதி போல இந்த படத்தில் கார்த்திக்கா நாயர். பெண் போராளியை பாரின் ரிட்டன் ரேஞ்சுக்குக் காட்டியது கொடுமை. அன்பே சிவம் படத்தில் உமா ரியாஸ் கெட்டப்பை கொஞ்சம் கவனித்திருந்திருக்கலாம். படத்தில் மூன்று ஹீரோக்கள் என்றாலும் ஒரே ஒரு வில்லன் என்றால் அது பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளராகத்தான் இருக்கும். பேசாமல் பேக்ரவுண்ட் ஸ்கோர் செய்த இளைய தென்றல் தேவாவின் புதல்வரிம் கொடுத்திருந்தால், தேவலாம் என்றிருந்தது. ‘’இந்த ரணகளத்துலயும் ஒரு கிளுகிளுப்பு கேக்குது’’ என்பது போல குண்டு வைக்கப் போற இடத்துல எதுக்கு குஜாலா ஒரு பாட்டு?.இன்னும் எத்தனை நாளுக்குத்தான் ராமநாராயணின் கிராபிக்ஸையே நம்பிக்கொண்டு இருப்போம்னு தெரியவில்லை, பலூர் கிராபிக்ஸ் அத்தனை அபத்தம்.

லெனின் சொன்னது போல ‘’கம்யூனிஸ்ட் என்பவன் இந்த உலகில் எப்போதும் மைனாரிட்டிதான்’’ என்பதை படத்தின் கடைசிக் காட்சியில் ‘’தனக்காக வாழ்கிற வாழ்க்கைங்குறது காத்துல அடிச்சிக்கிட்டு போகுற காகிதம் மாதிரி, தன்னை நம்பிக்கொண்டிருக்குற மக்களுக்காக வாழ்கிற வாழ்க்கைங்குறது மலை மாதிரின்னு நீங்க சொல்லுவீங்கல்ல அதோட ரீச் இன்னைக்கு என்னன்னு தெரியுமா?” என்று கேட்டுவிட்டு ‘’நான் எப்போதும் உண்மைதான் பேசுவேன்னு தெரியுல்ல சார்’’ என்று வி.சேதுபதி சொல்லும்போது, அதோட ரீச் ‘’அவ்வளவாக சொல்லிக்கொள்வது போல் இல்லை’’ என்பதை நச்சுன்னு உணர்த்தும்.

‘’பொம்மைக்குப் பதிலா நான் தொங்குறேன்’’ என ஆர்யா கேட்கும்போது, லிவரை ஷாம் இழுக்க விஜய் சேதுபதி கேட்கும்போதும் மூவரின் நடிப்பு சும்மா அள்ளும். ‘’16 வயசு பொண்ணை கற்பழித்து பொணத்தை நானே எரிச்சேன், இத பல இடங்களில் சொல்லிட்டேன், வேணும்னா இங்க இப்ப  நடிச்சுக்காட்டவா?’’ என கூறும் 12 வருட கைதியை, நிரபராதி என்பதை நிரூபித்து விடுதலை செய்யும் போது, அவன் கேட்கும் கேள்வி அனைத்துக்கும் இந்நாட்டில் யார் பதில் சொல்லுவது?. வசனத்திற்காக இந்த வருடத்தின் விஜய் அவார்ட்ஸ் விருதில் கண்டிப்பாக இந்த படம் நாமிநேட் லிஸ்டில் கூட இருக்காது, ஏனென்றால், வசனங்கள் அனைத்தும் அவ்வளவு ஷார்ப். குறிப்பாக தூக்குக்கு முன்னாடி ஷாம், ஆர்யா உரையாடல்.
‘’கருணை மனு கொடு நீ உயிர்வாழ நான் ஏற்பாடு பண்ணுகிறேன்’’ என ஷாம் கேட்கும்போது, ‘’உங்ககிட்ட கருணை கேட்டு நான் வாழனும்னு எனக்கு அவசியம் இல்லை, சாவ பார்த்து பயம் இருக்கு, வாழனும்னு ஆசை இருக்கு, அதை ஏன் நான் உங்ககிட்ட கேட்டு வாழனும்னு நீங்க ஆசைப்ப்டுறீங்க?’’ என ஆர்யா பதில் சொல்லும்போது அக்மார்க் போராளியாகுறார்.

‘’இது மக்கள் தேர்ந்தெடுக்கும் அரசு? மக்கள் எப்படி அவங்களுக்கு எதிரான ஒரு அரசை தேர்ந்தெடுப்பார்கள்?’’ என ஷாம் கேட்பதற்கு
‘’வாய்ப்பிருக்கு, அது நடந்துக்கிட்டும் இருக்கு’’ என கூலாக ஆர்யா சொல்லுவது நிகழ்கால உண்மை.

ரசித்த வசனங்கள்

1.     ஷாம் = ஜனங்களுக்காக போராடுறோம்னு சொல்லுறீங்க, ஆனா அந்த ஜனங்களே உன்னை தூக்குல போட சொல்லுறாங்க?
ஆர்யா = நீங்க பாக்குறவங்க மட்டுமே ஜனங்க கிடையாது.

2.    ஷாம் = இன்னும் கொஞ்ச நாள்ல சாகப்போற, அதுக்குள்ள என்ன எழுதப்போற?
ஆர்யா =  யார்தான் சாகமாட்டாங்க? நீங்க சாகமாட்டீங்களா? சாவுக்கு முன்னாடி என்ன பண்ணப்போகிறோம் என்பதுதான் முக்கியம்.

3.    கண்டுபிடிப்பு எல்லாமே மக்களோட நன்மைக்கு கிடையாது, காசுக்காக நிறைய கண்டுபிடிப்புகள் இங்க நடந்துக்கிட்டுத்தான் இருக்கு.

4.    வாழ்க்கை முரண்பாடுகளை கண்க்கிலெடுக்காத எந்த ஒரு தேசிய விடுதலை போராட்டமும் முழுமையா சாத்தியம் இல்லை.

5.    வி.சேதுபதி = இன்னைக்கு தூக்குப்போட்ட நாள், அதுதான் ஆஸ்பித்ரியில செத்த அனாத பொணத்தை என் செலவுல காரியம் பண்ணுறேன். என்ன பண்ணாலும் மனசு ஆறல.
கார்த்திகா = பசியில சாவுறங்கள காப்பாத்து உன் மனசு ஆறும்.

6.    அரசாங்கத்துக்கு வேலை செய்யுற எல்லா உளவாளிகளுக்கும் (நாதியத்து போய் கிடக்குறது) இதுதான் நடக்கும்.

7.    உலக தொழிலாளர்களே ஒன்றுகூடுங்கள்ன்னு சொன்னோம், ஆனா இன்னைக்கு உலக முதலாளிகள் எல்லாம் ஒன்னாகூடி நிக்குறாங்க.

8.    போராளி = மக்களுக்காக நாம எல்லா லெவல்லையும் இறங்கி போராடுறோம், ஆனா மக்கள் நம்மளை, தீவிரவாதின்னுதானே சொல்லுறாங்க?

கார்த்திகா = மீடியாகூட சூப்பர் கேப்பிட்டல் ஆகிடுச்சு, அவங்க காட்டுறதுமாதிரித்தானே மக்களும் நம்புவாங்க.

9.    ஆர்யா = இருக்குறதுலேயே பெரிய கிரைம், திட்டம்போட்டு ஒருத்தன கொல்லுறதுதான், அத பண்ணப்போற உங்களுக்கு (ஷாம்) என்ன தண்டனை? இல்ல இவனுக்கு (வி.சேதுபதி) என்ன தண்டனை?
வி.சேதுபதி = சார், உங்கள தூக்குல போடுறதே எனக்கு பெரிய தண்டனைதான் சார்.

லால்ஸலாம் எஸ்.பி.ஜனநாதன்



---------------------------------------------------------------------------------------யாஸிர் அசனப்பா.